இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசியால் சிலருக்கு சிறிய அளவிலான பக்க விளைவுகள் ஏற்பட்டு சில நாட்களில் குணமடைந்து வருகிறார்கள். இதற்கிடையே கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணத்தை இந்தியா உறுதி செய்தது.
இதனைத்தொடர்ந்து கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட மரணம் குறித்து விளக்கமளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிகழ்வுகளுக்கும் கரோனா தடுப்பூசியே காரணம் என கருத முடியாது என்றதோடு, கரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை விட, தடுப்பூசியால் உயிரிழக்கும் அபாயம் குறைவு எனவும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், தடுப்பூசி எந்தளவிற்கு பாதுகாப்பு அளிக்கும் என விளக்கினார். இதுதொடர்பாக அவர், "தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 75 - 80 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களில் 8 சதவீதம் பேருக்கே செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 6 சதவீதம் பேரே ஐசியூவில் அனுமதிக்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.