![BIHAR CM NITISH KUMAR](http://image.nakkheeran.in/cdn/farfuture/NDuEnka7oGq_jMGOu0B4ZCXmG4L3Xw2-Ymu6n3z8Szw/1627905220/sites/default/files/inline-images/FAFEC.jpg)
இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில், இந்த ஊடக செய்திகள் இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பெகாசஸ் விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "இதுகுறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து நீண்ட நாட்களாக நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசு பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.