Skip to main content

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை ரத்து செய்யக் கோரி வழக்கு!

Published on 04/05/2021 | Edited on 06/05/2021

 

ipl cricket match coronavirus mumbai high court

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட மைதானங்களில் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கரோனா காரணமாக சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி தங்களது தாயகத்துக்கு திரும்பி உள்ளனர். மேலும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்து வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று சில வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும், பேருந்து கிளீனர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹாவுக்கும் கரோனா உறுதியானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நாளை (05/05/2021) நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்றைய போட்டி உட்பட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ipl cricket match coronavirus mumbai high court

 

இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

அந்த மனுவில், "கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிடில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை ஒத்தியாவது வைக்க வேண்டும். இது தொடர்பாக பிசிசிஐ உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை மறுநாள் (06/05/2021) விசாரணைக்கு வர உள்ளது.

 

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்