ஊரடங்கு நேரத்தில் பொழுதை வீணாக்காமல் தங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்த தம்பதியினரை மராட்டிய மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், வாசிம் மாவட்டத்தை சேர்ந்தவர் கஜானன். இவரும், அவருடைய மனைவியும் அருகில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பேப்பர் பண்டல் போடும் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இதனால் ஏதாவது பயனுள்ள வேலையை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் இருவரும் நீண்ட காலமாக உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இதன்படி அவர்கள் இருவரும் வீட்டுக்கு பின்புறம் உள்ள இடத்தில் எவ்வித இயந்திரத்தையும் உபயோகிக்காமல் மண்வெட்டி, பாறை முதலிய பொருட்களை கொண்டே கிணறு தோண்டியுள்ளனர். இவர்களின் முயற்சியை கேள்விப்பட்டு, அங்கு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை கேலி செய்துள்ளனர். இயந்திரம் இல்லாமல் எப்படி முழு கிணற்றையும் தோண்டுவீர்கள் என்று கிண்டல் செய்துள்ளனர். இருந்தும் அவர்களின் கிண்டல்களை பொருட்படுத்தாது தம்பதியினர் இருவரும், தொடர்ந்து பள்ளம் தோண்டியுள்ளனர். 25 அடி ஆழம் தோண்டிய நிலையில் தண்ணீர் வேகமாக வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியுற்ற அவர்கள் அண்டை அயலாரை கூப்பிட்டு நம்முடைய தண்ணீர் கஷ்டம் நீங்கிவிட்டதாக சந்தோஷப்பட்டுள்ளனர். இவரின் இந்த முயற்சியை அம்மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.