நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட விரும்பினால் அவரது வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவோம் என்று உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளை பல அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தொடங்கி வருகின்றன. இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் பா.ஜ.க.வை வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒர் அணியில் இணைந்துள்ளனர். 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அம்மாநில தலைவராக அஜய்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கினார். மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அஜய்ராய் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு எதிராக அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ராகுல் காந்தி நிச்சயமாக மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார். அதே போல், பிரியங்கா காந்தி எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவார். அவர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட விரும்பினால் அவருடைய வெற்றிக்காக ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் முழுமையாக ஒத்துழைப்பு தருவார்கள்” என்று கூறினார்.