நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பிரதமர் மோடி, ஜி - 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (13.06.2024) இத்தாலி செல்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றபின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இத்தாலியில் உள்ள அபுலியாவில் இன்று முதல் வரும் 15 ஆம் தேதி ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி 7 அமைப்பின் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது. இதற்காக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களுக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.
இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் பங்கேற்பு, ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் செல்கிறார். ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.