
நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதையொட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், போலீசார் என 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றி வருகிறார்.