பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை தனது தலைமை ஆலோசகராக கடந்த மார்ச் மாதம் நியமித்திருந்தார். இந்தநிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர், தன்னை தலைமை ஆலோசகர் பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அமரீந்தர் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பொது வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கும் எனது முடிவின் அடிப்படையில், உங்கள் தலைமை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. எனது எதிர்கால செயல்பாடு குறித்து இனிமேல்தான் முடிவெடுக்க வேண்டும் என்பதால், தயவுசெய்து என்னை இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும், தேர்தல் வியூகம் அமைக்கும் தொழிலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.