
ஆந்திராவில் காவலர் ஒருவர் தனது குடும்பத்தாரை சுட்டுக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது காவலர் வெங்கடேஸ்வரலு, அதே மாவட்ட காவல் நிலையம் ஒன்றில் ரைட்டராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று தனது மனைவியையும் இரண்டு மகள்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் பின்னர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனச் செய்திகள் பரவின. இந்த சம்பவம் குறித்து கடப்பா, துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ஸாரிப் கூறுகையில், “புதன்கிழமை இரவு 11 மணி வரை வெங்கடேஸ்வரலு பணியில் இருந்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்புகையில், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து துப்பாக்கியுடன் சில குண்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளார்” எனத் தெரிவித்தார்.
மேலும், வெங்கடேஸ்வரலுவின் 20 வயதான மூத்த மகள் கல்லூரியிலும், இளைய மகள் 10ம் வகுப்பிலும் பயின்று வந்தார்கள் எனவும், மனைவிக்கு 45 வயது என்றும் போலீசார் கூறினர்.
தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார், சம்பவம் நடந்த வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது. இதுமட்டுமின்றி இறந்த காவலர் சமீபமாக பங்குச் சந்தையில் பணத்தை இழந்ததாகவும், சில குடும்ப பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த வீட்டிற்கு கடப்பா போலீஸ் சூப்பிரண்டு சித்தார்த் கவுஷல் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.