
டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடினார். பிரதமருடனான கலந்துரையாடலில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் காணொளி மூலம் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பொதுத்தேர்வுகள் மிகப்பெரிய சவால் என்று உறவினர்கள், குடும்பத்தினர் கூறுவர். தேர்வைக் கண்டு மன அழுத்தம் கொள்ள வேண்டாம். மாணவர்கள் தங்கள் திறமையைக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிய முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒன்றும் இறுதிக்கட்ட வாழ்க்கை இல்லை. பொதுத்தேர்வுகளை அச்சமின்றி துணிவுடன் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். மாணவர்களுக்குப் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்கள், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் திகழ வேண்டும். தற்போதுள்ள பெற்றோர்கள் தேர்வு முடிவுகளை வைத்து குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் என்று முடிவெடுக்கிறார்கள்" என்றார்.
இந்த காணொளி கலந்துரையாடலின் போது பிரதமர் கையடக்க கணினியை (Tablet PC) பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.