இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வரும் நிலையில் லடாக் பகுதியில் சீனா அத்துமீறி ராணுவ வீரர்களை அனுப்பி வருகின்றது. எல்லையில் அமைதியைக் குலைக்கும் விதமாக அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், "இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பெரிய மோதல் நடந்து வருகின்றது. இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதுதொடர்பாக இந்தியப் பிரதமருடன் நான் பேசினேன். அவர் நல்ல மனநிலையில் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், கடைசியாக இருவரும் ஏப்ரல் 4 ஆம் தேதி பேசினார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எதற்காக ட்ரம்ப் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.