முகலாய மன்னர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு, கடந்த 3 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்று நீதிமன்றம், இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு நகரத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் முதல்வராகப் பதவியேற்ற பிறகு அங்குள்ள பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முகல் சாராய் என்ற இடத்தின் பெயரை தீன் தயாள் உபாத்யாயா நகர் என்று மாற்றப்பட்டது. அதே போல், அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் பெயரை அயோத்தி என்றும் மாற்றப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், அலிகார் என்ற இடத்தின் பெயரை இனிமேல் ஹரிகார் என்று மாற்றப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி அலிகார் நகர மேயர் பிரசாந்த் சிங்கால் தலைமையிலான கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆக்ராவை அக்ராவன் அல்லது அகர்வால் என்று மாற்றவும், முசாபர் நகர் என்ற இடத்தின் பெயரை லட்சுமி நகர் என்று மாற்றவும் உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.