கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்படும் திட்டமானது முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதியிலிருந்து (மார்ச் 01) 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். அதனைத்தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் ஆகியோர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, இன்று (11.03.2021) தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "எனது தாயார், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக்கொண்டார் என்பதை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களைச் சுற்றி இருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளும் தகுதி உடையவர்களுக்கு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவுமாறும், அவர்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.