ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தண்டனையை நிறுத்தி வைத்து சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாக இருப்பதாகவும், இதனால் பலமுறை வழக்கை தேவையின்றி ஒத்திவைக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருந்த கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.