Skip to main content

மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட விவகாரம்; குடியரசு தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

PM MODI - RAM NATH KOVIND

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அங்கு நடைபெறும் பேரணியில் உரையாற்றுவதாக இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.

 

இந்நிலையில் பிரதமர் சென்ற வழியில், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர். இதன் காரணமாக மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் நரேந்திர மோடி சிக்கிக்கொண்டார். பின்னர் பிரதமர் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பி சென்றார். இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "பிரதமர் வருகையையொட்டி, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி கடைசி நேரத்தில் சாலை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பாதையை மாற்றி, வேறு பாதையில் பயணித்தது எங்களுக்கு தெரியாது. எனினும், பிரதமரின் பாதுகாப்புக்கு பஞ்சாப்பில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் சென்றது வருத்தம் அளிக்கிறது. பா.ஜ.க. இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது" என தெரிவித்தார்.

 

இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அரசு, பிரதமர் பயணித்த பாதை மறிக்கப்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. அதேபோல் பிரதமர் பயணித்த பாதை மறிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த கோரும் மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது.

 

இந்தநிலையில் பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கவலை தெரிவித்ததாகவும், பிரதமர் மோடி குடியரசு தலைவரை சந்திக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்