உலக பொருளாதார மன்ற மாநாட்டில், நேற்று (28.01.2021) இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, கரோனா தடுப்பூசியை அனுப்புவதன் மூலம் பல நாடுகளில் உள்ள மக்களின் உயிரை இந்தியா காப்பாற்றுகிறது எனவும், இந்தியாவில் தகவல் பாதுகாப்பிற்குக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:
"130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் சார்பாக, இந்த உலகத்திற்கான நம்பிக்கை, நேர்மறை செய்தியுடன் நான் உங்கள் முன் வந்துள்ளேன். வெறும் 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், 300 மில்லியன் முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான எங்கள் இலக்கை அடைவோம். இப்போது இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் பல தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து வரும் என்பதை அறிவதன் மூலம் உலகப் பொருளாதார மன்றம் நிம்மதி பெறும். இந்த கடினமான காலக்கட்டத்தில், இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கியது. கரோனா தடுப்பூசிகளை அனுப்புவதன் மூலமும், தடுப்பூசிக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களின் உயிரை இந்தியா காப்பாற்றுகிறது.
இந்த தசாப்தத்தில் பொருளாதாரத்தை உயர்த்த, இந்தியா ஒன்றன்பின் ஒன்றாக சீர்திருத்தங்களை மேற்கொள்கிறது. இந்தச் சீர்திருத்தங்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டன. சந்தை பங்கேற்பிற்காக அனைத்து துறைகளையும் திறப்பதை நாங்கள் நம்புகிறோம். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எல்லா முன்னணி தொழில்நுட்பங்களிலும் முதலீட்டை ஊக்குவிக்கிறோம். நாட்டில் தகவல் பாதுகாப்பு தொடர்பான கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன."
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.