![Place at Kendriya Vidyalaya School for those who lost their parents due to corona!](http://image.nakkheeran.in/cdn/farfuture/HsgHph3ftPHrTInRcNH0FuXfFUMQTSh_IexBb1k4jTc/1651069184/sites/default/files/inline-images/kendriya434.jpg)
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளியில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா சங்கதனில் ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு அடிப்படையில் சில இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு முதல் ரத்துச் செய்யப்படுவதாக கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிர்வாகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள் கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஊழியர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கல்வி செலவை பிரதமர் கேர்ஸ் திட்டத்தின் மூலம் ஈடு செய்யப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சேர்க்கை விண்ணப்பம் குறைவாக இருப்பின் மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாவது அறிவிப்பு வெளியிடப்படும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.