கேரளாவில் நிபா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் தெரிவித்த மருத்துவர் கஃபீல்கானின் விருப்பத்திற்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் நிபா எனும் வைரஸ் பரவியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்த பாதிப்புகளில் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகளைக் காப்பாற்ற போராடிய மருத்துவர் கஃபீல்கான் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர், ‘நிபா வைரஸ் தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் மற்றும் அதுசார்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி விடப்படும் வதந்திகளால் உறக்கம் கெட்டுப்போய் இருக்கிறேன். எனவே, நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் என்னை அனுமதிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மருத்துவர் கஃபீல்கானின் இந்த வேண்டுகோளை வரவேற்றிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவத்துறையில் தங்களது உயிர் மற்றும் உடல்நலனைத் துச்சமாகக் கருதி மருத்துவர்கள் பலரும் சேவையாற்றுகிறார்கள். அவர்களில் ஒருவராகவே கஃபீல்கான் எனக்குத் தெரிகிறார்’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், கஃபீல்கான் உள்பட விருப்பமுள்ள எந்த மருத்துவரும் கோழிக்கோடு மருத்துவமனை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.