ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மூன்று தீவிரவாதிகள், போலீஸ் வாகனத்தைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூன்று போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 14 பேரில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு நடைபெற்ற மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாகக் கருதப்படும் இந்தத் தாக்குதல் தொடர்பான விவரங்களைப் பிரதமர் மோடி கேட்டுள்ளார்.
இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் கிளையான காஷ்மீர் டைகர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த கான்ஸ்டபிள் ரமீஸ் அகமது பாபாவுக்கு காஷ்மீரின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமாரும், பிற போலீஸ் அதிகாரிகளும் இன்று (14.12.2021) மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு பேசிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார், "இது இரண்டு வெளிநாட்டு பயங்கரவாதிகளும் ஒரு உள்ளூர் பயங்கரவாதியும் இணைந்து நடத்திய திட்டமிட்ட தாக்குதல். இந்த தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர். தாக்குதலை நடத்திய பயங்கரவாத குழு விரைவில் ஒழிக்கப்படும்" என கூறியுள்ளார்.