போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி தினக் கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. லடாக்கில் உள்ள போர் நினைவுச் சின்னம் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில் லடாக்கில் உள்ள போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு நேரில் சென்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி, நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும். சமீப காலமாக போர்கள் நீடித்து வரும் நிலையில், ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது.