நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18- ஆம் தேதி கூடியது. இந்த கூட்டத்தொடரில் எஸ்பிஜி பாதுகாப்பு, குடியுரிமை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்று (13.12.2019) காலை அவை கூடியதில் இருந்தே ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் 'மேக் இன் இந்தியா' குறித்து பேசி வரும் நிலையில், தொடர் பாலியல் வன்முறைகள் அரங்கேறி, 'ரேப் இன் இந்தியா'வாக தற்போது நம் நாடு உள்ளதாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில் இன்று (13.12.2019) ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது" என தெரிவித்தார். இதையடுத்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் 14 மசோதாக்களும், மாநிலங்களவையில் 15 மசோதாக்களும் நிறைவேறியுள்ளது என்றும், மக்களவையில் 116%, மாநிலங்களவையில் 100% ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.