
மாநிலங்களவை பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் நாளை (20/09/2020) அவைக்கு வர, அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் தொடர்பான மூன்று மசோதாக்கள் ஏற்கனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில்தான், மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கலாக உள்ள நிலையில், நாளை மாநிலங்களவைக்கு பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு கட்டாயம் வர வேண்டும் என்று பா.ஜ.க கொறடா உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறும் பட்சத்தில், குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.