ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கிரு என்ற பெயரில் நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீா் மின்சார மேம்பாட்டு நிறுவனமும், தேசிய நீா் மின்சார நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ‘செனாப் வேலி பவா் புராஜெக்ட் நிறுவனம்’ இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.
இந்தநிலையில், இந்த நீர்மின் திட்டத்திற்குப் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை இந்தியாவின் சிந்து நதி நீா்வள ஆணையா் பிரதீப் குமாா் சக்ஸேனா உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் நீா்வள ஆணையா் சையது முகமது மெஹா் அலி ஷா கடந்த வாரம் தங்களைத் தொடர்புகொண்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்தியாவின் நீர்மின் திட்டம், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் (IWT) விதிகளுடன் முழுமையாக இணங்கும் வகையில் இருப்பதாகவும், மத்திய நீா்வள ஆணையமும் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரதீப் குமாா் சக்ஸேனா, "பொறுப்பான நதிக்கரை நாடாக இந்தியா தனது உரிமைகளை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள உறுதிபூண்டுள்ளது. பாகிஸ்தான் எழுப்பியுள்ள பிரச்சனைக்கு இணக்கமான தீர்வு எட்டப்படும் என இந்தியா நம்புகிறது" எனவும் கூறியுள்ளார்.
மேலும், அடுத்த வருடம் கூடவிருக்கும் நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் கூட்டத்தில், பாகிஸ்தானின் எதிர்ப்பு குறித்து விவாதிக்கப்படலாம் என்றும், அப்போது இந்தியா தனது நிலையை பாகிஸ்தானுக்கு விளக்கும் என்றும் பிரதீப் குமாா் சக்ஸேனா தெரிவித்துள்ளார்.