உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அம்மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் மற்றும் சக அமைச்சர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் சத்பால் மகாராஜுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மனைவி குடும்பத்தார் என மொத்தம் 21 பேருடன் ஒரே வீட்டில் வசித்து வரும் சத்பால் கரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, வீட்டில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
கடந்த வாரம், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் அமைச்சர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் சத்பால் கலந்துகொண்டார். இதனையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்த அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஹராக் சிங் ராவத், மதன் கவுசிக், சுபோத் உனியால் ஆகிய மூன்று அமைச்சர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இனி முதல்வரின் பணிகளைக் கல்வித்துறை அமைச்சர் தனசிங் ராவத் கவனிப்பார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.