Skip to main content

"இது காலத்தின் தேவை.. நாடு பேரழிவிற்கு காத்திருக்கிறது" - ப.சிதம்பரம் எச்சரிக்கை! 

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

p chidambaram

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உடனடியாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர், இந்திய மருத்துவ சங்கம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இதற்கிடையே சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர், கரோனா தடுப்பூசி விருப்பப்படுபவர்களுக்கு வழங்கப்படாது என்றும், யாருக்குத் தேவையோ அவர்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் தகுதி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

 

தொடர்ந்து நேற்று (07.04.2021) செய்தியாளர்களைச் சந்தித்தத மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அரசுகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கோருவது, அம்மாநிலங்கள் தங்களது மோசமான தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப மேற்கொள்ளும் முயற்சிபோல் இருப்பதாக விமர்சித்தார். இந்தநிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு மறுப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது; சில மாநிலங்களின் முதல்வர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆயினும் அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என மத்திய அரசு கூறுகிறது. எந்தவொரு முன்பதிவும் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை. 

 

மத்திய அரசு, அதன் அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாட்டின் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்துள்ளது. நாடு பேரழிவிற்கு காத்திருக்கிறது. மோடி அரசாங்கத்தைப் போல, கடுமையான அரசாங்கம் உலகின் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இல்லை. பணமதிப்பிழப்பிலிருந்து, மோசமான தடுப்பூசி திட்டம் வரை, பாஜக அரசின் தவறான கொள்கைகளுக்கு இந்தியர்கள் பெரிய விலை கொடுத்து வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்