7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ளது.
முன்னதாக ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார்.
இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேசிய பழைய வீடியோ ஒன்றை கட் செய்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரதம அலுவலர்கள் தரப்பு, மோடி பிரச்சாரத்தில் திரித்து பேசுவாதக குற்றம்சாட்டியுள்ளனர். பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் இணைத்துப் பேசப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வந்து தவறான பிரச்சாரத்தைப் பிரதமர் முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என வெறுப்பு பிரச்சாரம் செய்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ''தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தியடையட்டும்..'' என இந்திய தேர்தல் அணையத்தை சாடியுள்ளார். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என வெறுப்பு பிரச்சாரம் செய்கிறார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து அமைதி காத்து வருவாதக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே, பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ''பிரதமர் இப்போது பொதுமக்களின் கவனத்தை பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப விரும்புகிறார். முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, மோடியின் பொய்களின் அளவு மிகவும் அதிகரித்திருக்கிறது. தோல்வி பயத்தின் காரணமாக, வாக்களிக்கும் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறார்..'' எனச் சாடியுள்ளார். அதுபோல பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''மோடி ஜி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசைதிருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. அதிகாரத்திற்காக பொய் பேசுவதும், ஆதாரமற்ற விஷயங்களைப் பேசுவதும், எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பயிற்சியின் சிறப்பு. இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்தப் பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை..'' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால், இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு மீது எந்த வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, வெறுப்பு பிரச்சாரம் செய்த மோடிக்கு எதிர்ப்புகள் நாடு முழுவதும் எழுந்து வருகிறது.