16-வது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் எம்.பி.க்களின் செயல்பாடு, சேவை, பங்களிப்பு குறித்து சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் இணைந்து மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் கேரளா, ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தின் எம்.பி க்கள் சிறப்பாக செயல்படுவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் தமிழகமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி தமிழக எம்.பி க்கள் இந்த பட்டியலில் கடைசியில் இருந்து இரண்டாம் இடத்தில உள்ளனர்.
முதல் இடம் பிடித்துள்ள கேரளா மாநிலத்தில் 20,178 வாக்காளர்களிடம் தங்கள் மாநில எம்.பி.க்கள் செயல்பாடு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் 52.4 சதவீதம் பேர் அனைத்து எம்.பி.க்களின் செயல்பாடும் நன்றாக உள்ளது எனக்கூறியுள்ளனர். 16 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல்பாடு சுமாராக உள்ளது என்றும், 24 சதவீதம் பேர் அனைத்து எம்.பி.க்களும் மனநிறைவு அளிக்கும்படி செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, மக்களவையில் 37 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாடு குறித்து 27,268 வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் எந்த எம்.பி.யின் செயல்பாட்டிலும் திருப்தியில்லை என்று 43 சதவீதம் பேரும், எம்.பி.க்கள் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக 18.2 சதவீதம் பேரும், சுமாராக உள்ளது என 23.3 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்களின் அடிப்படையில் கேரளா மாநிலம் 44.4 மதிப்பெண்களும், தமிழகம் -1.5 மதிப்பெண்களும் எடுத்துள்ளது.