"ஹலோ தலைவரே, கலைஞரின் கனவுத் திட்டம் ஒன்றை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வெற்றிகரமாக சாத்தியமாக்குகிறது.''”
"ஆமாம்பா, கலைஞர் நூற்றாண்டு நிறைவடையும் இந்த நேரத்தில், கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுவது சிறப்பல்லவா?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் பாயும் நதிகளை இணைப்பது என்பது கலைஞரின் பெருங்கனவுகளில் ஒன்று. அதில், முதற்கட்டமாக தென் மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றோடு கருமேனியாறு, நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் அறிவிப்பை தனது 2006-2011 ஆட்சிக் காலத்தில் அவர் அறிவித்தார். அவருக்கு பின்னால் வந்த அ.தி.மு.க. ஆட்சி இதனை கண்டுகொள்ளவில்லை. அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால் உபரிநீரை தேக்கி வைக்கும் வாய்ப்பாகவும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமாகவும் அது இருந்திருக்கும். ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி, இதை ஓரங்கட்டிவிட்டது. இந்த நிலையில், தற்போது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்ததும், அவர் இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தினார். அதன்படி, தாமிரபரணி ஆற்றின் நீரை, கன்னடியான் கால்வாயிலிருந்து வெள்ளக் கால்வாய் மூலம், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வறட்சி மிகுந்த பகுதிகளுக்கு திருப்புதல் மற்றும் தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு- நம்பியாறு உள்ளிட்ட நதிகளை இணைத்தல் ஆகிய இந்த 2 பெரிய திட்டங்களுக்காக 1060 கோடியே 76 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார் ஸ்டாலின்.''”
"ஆமாம்பா...''
’"இதில் 1020 கோடி ரூபாய் செலவிடப் பட்டுவிட்டது. இன்னும் 40 கோடி மட்டுமே நிலுவையில் இருக்கிறது. அதாவது, நாலரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கெனால் வெட்டும் பணிகள் மட்டுமே பாக்கி. ஆனால், இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடக்கவில்லை. காரணம், சாத்தான் குளம் தாலுகாவுக்கு உட்பட்ட அரசன் பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன் நாடார் என்பவர், இந்தத் திட்டத்தால் எனது நிலம் பாதிக்கப்படுகிறது என்று கோர்ட்டில் தடை வாங்கியிருக்கிறார். அதனால், மக்களின் தாகத்துக்கும் விவசாயத்துக்கும் பலனளிக்கக்கூடிய மிகப்பெரிய திட்டமான இது, 99 சதவீதம் முடிவுற்ற நிலையிலேயே நின்று கொண்டிருக்கிறது. சமீபத்தில், இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விவாதித்தார் ஸ்டாலின். இதனையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிராக தடையாணை பெற்றுள்ள கணேச நாடாரை நேரில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தி, இதுதொடர்பான வழக்கை வாபஸ் பெற, சம்மதிக்க வைத்திருக்கிறார் அனிதா. இன்னும் ஓரிரு வாரங்களில் வழக்கு வாபஸ் பெறப்பட இருக்கிறது. இதனை முதல்வரிடம் அனிதா தெரிவிக்க, அவரைப் பாராட்டியுள்ளார் ஸ்டாலின். விரைவில் கலைஞரின் இந்த கனவுத்திட்டம் செயல்வடிவம் பெறப்போகிறது.'”
"தி.மு.க.விற்குள் ஒரு ரசாயன மாற்றம் நடந்துகொண்டு இருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தற்போது கட்சி ரீதியாக தி.மு.க. வைத்திருக்கும் மாவட்டங்களை எல்லாம், இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்ற வகையில் பிரித்து, புதிய மா.செ.க் களை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை, கட்சிக்குள் உருவாகியிருக்கிறது. இதன் மூலம் அதிகாரப் பரவல் கட்சிக்குள் உருவாகும் என்கிறார் கள் தி.மு.க.வின் சீனியர்கள். குறிப்பாக சென்னை யை எடுத்துக்கொண்டால், இங்கு அமைச்சர் சேகர்பாபுவின் ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகம். அதேநேரம், மாஜி மந்திரியான ஆவடி நாசர் பலவீனமான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையை மாற்றி, கட்சியின் செயல்திறன் மிக்க முக்கிய பவர் புள்ளிகளுக்கு, அவர்கள் செயல் பட அதிக அதிகாரத்தை வழங்கவேண்டும் என்கிற மன நிலைதான் கட்சியினருக்கு இருக்கிறதாம். இதை தி.மு.க. தலைமையும் முழுதாக உணர்ந் திருப்பதால், தேர்தலுக்குப் பிறகு கட்சி ரீதியாக புதிய மாவட்டங்களும் அதற்குப் புதிய மா.செ.க்களின் நியமனமும் நடக்கும் என்கிறார்கள். அதேபோல் அமைச்சரவையிலும் புதுமுகங்கள் சிலருக்கு வாய்ப்பு இருக்கும் என்கிற பேச்சும் அறிவாலயத் தரப்பில் பலமாக அடிபடுகிறது.''”
"எடப்பாடி, தனது 70 ஆவது பிறந்நாளை சுவாரஸ்யமாகக் கொண்டாடி இருக்கிறாரே?''”
"மே 12 ஆம் தேதி, தனது 70ஆவது பிறந்த நாளை, தனது சேலம் இல்லத்தில் கொண்டாடி னார் எடப்பாடி. அவர் வெட்டுவதற்காக 70 கிலோ எடை கொண்ட கேக்கை அவரது வலதுகரமான சேலம் இளங்கோவன், ஏற்பாடு செய்திருந்தார். நீண்ட சதுரமாக வடிவமைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கில், தாமரை வடிவிலான 3 பூக்கள் கிரீமால் செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்த எடப்பாடி, "அது என்ன தாமரைப்பூவா?' என்று கேட்க, அருகிலிருந்தவர்கள் ஆமாண்ணே… என்று நமட்டுச் சிரிப்பு சிரித்திருக்கிறார்கள். தாமரை மீது மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட, "நாம் தாமரையை இருட்டாக்குவோமா?' என்றபடி எடப்பாடி மெழுகை ஊதியணைத்து கேக்கையும் வெட்டி னார். உடனே, ’"தாமரைப்பூவை ஊதி அணைத்த எடப்பாடியார் வாழ்க!' என்று அங்கிருந்தவர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். இந்த வருடம் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களின் பட்டியலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய் பெயரும் இடம்பெற்றிருந்தது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.''”
"எடப்பாடிக்கு இது சோதனைக்காலம் போலிருக்கே?''
"உண்மைதாங்க தலைவரே, எப்படியும் அ.தி.மு.க.வை மாஜி சசிகலா, ஓ.பி.எஸ். மற்றும் மாஜி வேலுமணி ஆகியோரை வைத்து உடைப்பது என்கிற திட்டத்தில், ஒரு பக்கம் பா.ஜ.க. தன் காய்களை விறுவிறுப்பாக நகர்த்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அ.தி.மு.க.வில் இருக்கும் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சீனியர்களும், அதன் இரண்டாம் கட்டத் தலைவர்களும், எடப்பாடி என்கிற ஒற்றைத் தலைமையை எதிர்த்துக் கட்சியில் ஒரு கலகத்தை உருவாக்கத் தயா ராகி வருகிறார்கள். அதற்குக் காரணமாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, சரியான கூட்டணியைக் கூட அமைக் காமல் இந்த நாடாளுமன்றத் தேர் தலை அவர் பலவீனமாக எதிர் கொண்டிருக்கிறார் என்பதுதானாம். நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்குப் பிறகு, எடப்பாடிக்கு எதிரான கலகம் பெரிய அளவில் நிலநடுக்கமாக அங்கே உருவாகும் என்பதுதான், அ.தி.மு.க.வின் இப்போதைய தட்பவெப்பம்.''”
"அ.தி.மு.க.வில், மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மகன் மீது மோசடிப் புகார்கள் எழுந்திருக்கிறதே?''”
"அ.தி.மு.க.வில் ராஜன் செல்லப்பா வின் மகன் ராஜ்சத்யன், அக்கட்சியின் ஐ.டி. விங்கில் நிர்வாகியாக இருக் கிறார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் களைத் தொடர்புகொண்டு, உங்க ளைப் பற்றி ஏகப்பட்ட நெகட்டிவ் செய்திகள் இருக்கின்றன. அவை வெளிப்படாமல் இருக்க, என்னைக் கவனியுங்கள் என்று ஏகப்பட்டது வசூல் செய்திருப்பதாக, அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஈரோடு வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார், இவர் மீதான புகார் களை எடப்பாடிவரை கொண்டு போயிருக்கிறாராம். இதனால் எரிச்சலான எடப்பாடி, வெளிநாட்டு டூரில் இருந்த ராஜ்சத்யன், திரும்பி வந்திருக்கும் நிலையில் அவரை ரகசியமாக சேலத்திற்கு வரவழைத்து, தீவிரமாக விசாரித்திருக்கிறார் எடப்பாடி. எனவே, சத்யனின் கட்சிப் பதவி பறிக்கப்படலாம் என்கிறார்கள் அ.தி. மு.க.வினர்.''”
"சரிப்பா.. நடிகர் விஜய், தனது கட்சி நிர்வாகிகள் பட்டியலை பொது அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, தேர்தல் ஆணையத்தில் தனது கட்சிப் பெயரைப் பதிவு செய்ய நடிகர் விஜய் விண்ணப்பித்து மூன்று மாதங்களாகியும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளால் அதைத் தேர்தல் ஆணையம் இன்னும் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து ஏற்கனவே நாம் பேசியிருந்தோம். இப்போது தனது கட்சிப் பெயரைப் போல வேறு நபர்கள் யாரும் விண்ணப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, அடுத்த மூவில் இறங்கியிருக்கிறார் விஜய். அதன்படி தனது கட்சியின் பெயரையும், கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகளாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவேண்டிய பெயர்களையும் பொது அறிவிப்பாக அவர் வெளியிட்டிருக்கிறார். புதிதாகக் கட்சி தொடங்கு பவர்கள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நடைமுறையில் இதுவும் ஒன்றாம்.''”
"ஆமாம்பா, ஆனால் தனது பெயரை அவர் ஜோசப் விஜய்னு அதில் குறிப்பிட்டிருக்கிறாரே?”
"உண்மைதாங்க தலைவரே, குடும்ப ரீதியிலான தனது இயற்பெயரான ஜோசப் விஜய் என்று தன் பெயரைக் குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் தலைவராக தன்னையும், கட்சியின் பொதுச்செயலாளராக புஸ்சி ஆனந்த்தையும், பொருளாளராக தனது ஆடிட்டர் வெங்கட்ராமனையும், தலைமை நிலையச் செயலாளராக ராஜசேகரையும், கொள்கை பரப்பு இணைச்செயலாளராக தாஹிரா என் பவரையும் இந்தப் பொதுஅறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். புதிதாக ஒரு கட்சியைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டுமானால், பொது வெளியிலிருந்து ஆட்சேபனை ஏதும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த பொதுஅறிவிப்பை நடிகர் விஜய், தன் கட்சி சார்பில் வெளியிட்டிருக்கிறார். அவரது கட்சிப் பெயர் குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். அதனால் ஆட்சேபனை ஏதேனும் வருகிறதா என்பதை விஜய் தரப்பு பரிதவிப்போடு கவனிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.''”
"சென்னையில் உள்ள மூப்பனார் நினைவிடம் இடம் மாறலாம்னு தகவல் வருதே?''”
"காங்கிரசின் மூத்த தலைவ ராகவும், த.மா.கா. தலைவராகவும் இருந்த மறைந்த மூப்பனாருக்கு, சென்னை காமராஜர் அரங்கத்தின் பின்புறம் நினைவிடம் இருக்கிறது. இது அமைந்துள்ள நிலம் காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காமராஜர் அரங்கத்தில் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலை மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த நினைவிடம் குறித்து ஒரு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது மூப்பனார் நினைவிடம் இருப்பதால் காமராஜர் அரங்கில் முன்புபோல் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை என்று பலரும் சொல்ல, இதனையடுத்து, மூப்பனார் நினைவிடத்தை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். இதுகுறித்த தகவலை கட்சியின் தேசிய மேலிடத்தின் கவனத்துக்கு விரைவில் எடுத்துச்சென்று சம்மதம் பெறவிருக்கிறார்களாம்.''”
"காங்கிரஸ் பிரமுகர் கே.பி. கே.ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணை மந்தமா போறதுக்கு காரணமே வேறயாமே?''
"ஆமாங்க தலைவரே, இந்த கொலை வழக்கில் பத்துநாளான நிலையில, இப்பதான் கிணற்றை தூர்வாரி கத்தியை எடுத்தோம், கடைசியா அவர் வாங்கிய டார்ச் லைட்டை கண்டெடுத்தோம்னு நெல்லை போலீஸ் தற்பெருமையடிக்குது. இம்புட்டு நாள் தோட்டத்தை சல்லடையா தேடியதுல டார்ச்லைட் கிடைக்கலையா என்ன? அதோட, ஜெயக்குமாரோட மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினை மட்டும் காலை, மாலைன்னு இரு வேளையிலும் போலீஸ் ஸ்டேசனுக்கு கூப்பிட்டு விசாரிச்சவங்க, இப்பதான் இளைய மகன் ஜோ மார்ட்டினையும் அதேபோல் விசாரிக்கத் தொடங்கியிருக்காங்க. மொத்தத்துல, சம்பந்தப்பட்டது பெரிய இடம், நமக்கெதுக்கு வம்பு? அமைதியா இருந்தாலே வழக்கு விசாரணைய சி.பி.சி.ஐ.டி.க்கு மாத்திடுவாங்கங்கற நெனப்புலதான் மந்தமா விசாரிச்சுட்டு வர்றாங்களாம். சீக்கிரமே வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாறினாலும் ஆச்சர்யமில்லைன்னு சொல்றாங்க!''
"ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கும் கெஜ்ரி வாலுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருக் கிறார்களே?''”
"அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் ஒன்றாம் தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி நீதிமன்றம். சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். மோடி, அமித்ஷாவை தனது பிரச்சாரத்தால் வறுத்து எடுத்துக்கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால். அவரது பிரச்சாரம் வட இந்தியாவில் பரபரப்பாகி வர, இந்தியா கூட்டணிக்கு அது பலமாகவும் இருக்கிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பலரும் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்திருக் கிறார்கள். ஆனால், ராகுல்காந்தி மட்டும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. கூட்டணிக்குள்ளே இது விவாதத்தை உருவாக்கியதால், இந்த விசயத்தை ராகுலின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொள்கிறேன். தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்தார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல். இதற்காக அவருக்கு நன்றி சொல்லும் விதமாக தி.மு.க. சார்பில் மூத்த அமைச்சர் கே.என்.நேருவும், சிறுத்தைகள் சார்பில் அதன் தலைவர் திருமாவளவனும் தனித்தனியாக கமலை நேரில் சந்தித்து நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில், கமலுக்கு ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.''