புதுச்சேரி துணைநிலை (பொறுப்பு) ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்து இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்ததையொட்டி, தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை (பொறுப்பு) ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி ராஜ்நிவாஸில் இன்று (18/02/2022) ஊழியர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அத்துடன், ஊழியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன். புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்பளித்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஓராண்டு பயணத்தில் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.