90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற பட்சத்தில் அந்தத் தேர்தல் நடைபெற்றது.
90 தொகுதிகளுக்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 40 தொகுதிகளும், காங்கிரஸ் 31 தொகுதிகளும் வெற்றி பெற்றன. மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. லோக் தள கட்சி 1 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடத்தில் வென்றனர். பெரும்பான்மை ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, 10 தொகுதிகள் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியினுடமும், சுயேட்சை வேட்பாளர்களுடனும் கூட்டணி அமைத்து பா.ஜ.க ஆட்சி அமைத்து வந்தது. அதன் அடிப்படையில், பா.ஜ.க சார்பில் மனோகர் லால் கட்டார் ஹரியானா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பா.ஜ.க-வுடன் சுமூக தீர்வு எட்டப்படாததால் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக்கொண்டது. இதையடுத்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஹரியானா சட்டசபையில் மொத்தம் 89 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க ஆதரவு தெரிவித்து வந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேர் ஆதரவை திரும்ப பெற்று வாபஸ் பெற்றனர். இதனால், ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனால், 43 எம்.எல்.ஏக்கள் கொண்டு, காங்கிரஸை விட பா.ஜ.கவுக்கு இன்னமும் பெரும்பான்மையில் இருக்கிறது. காங்கிரஸுக்கு 30 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், பா.ஜ.கவில் இருந்து விலகிய 3 சுயேட்சை வேட்பாளர்கள், காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 45 எம்.எல்.ஏக்கள் கொண்டு ஆட்சி அமைக்க தேவை என்ற பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 13 எம்.எல்.ஏக்கள் தேவை.
45 இடங்களில் 43 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் பா.ஜ.க அரசு கவிழும் சூழ்நிலையில் இருக்கிறது. அதே வேளையில், ஹரியானாவில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க அரசை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸுக்கு ஆதரவு தர இருப்பதாக ஜனநாயகக் ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த சவுதாலா அறிவித்துள்ளார். மேலும் அவர், ஹரியானா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘தற்போதைய சூழ்நிலைகளின் தீவிரத்தன்மை மற்றும் ஹரியானாவை மீட்டெடுக்க வேண்டிய அவசரத் தேவை மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, உங்கள் அரசியலமைப்புச் சிறப்புரிமையைப் பயன்படுத்துமாறு நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஹரியானாவில் ஆளும் பா.ஜ,க அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது. எனவே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஹரியானாவில் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது