தங்களை எதிர்த்துப் பேசுபவர்களின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை பாஜக அரசு பயன்படுத்தும் என ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2002 முதல் 2011-ம் ஆண்டுவரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோஸியேஷனுக்கு பிசிசிஐ வழங்கிய நிதியில் ரூ.43 கோடி ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என ஃபரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று ஃபரூக் அப்துல்லா அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினார்.
இந்த சூழலில், ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு நேரில் விசாரணை நடத்துவதற்கு அதிருப்தி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஒமர் அப்துல்லா, "இன்று என் தந்தைக்கு 84-வது பிறந்த நாள். எதிர்க்கட்சியினரை மிரட்டவும், குரலை ஒடுக்கவும் எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப்பிரிவு, ஊழல் தடுப்பு அமைப்புகளைப் பாஜக அரசு பயன்படுத்தும், உங்களின் சதித்திட்டம் என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். யாரேனும் மத்திய அரசுக்கு எதிராகப் பேசினால், துணிச்சலாகப் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தால் அவர்கள் வேட்டையாடப்பட்டு, சம்மன் அனுப்பி வைக்கப்படும்” என ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.