Skip to main content

நாகாலாந்து: "தப்பி செல்ல முயற்சிக்கவில்லை" - அமித்ஷா விளக்கத்தை மறுக்கும் உயிர்பிழைத்த நபர்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

nagaland

 

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவிகள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அந்தக் கிராம மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் மேலும் ஏழு பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறையில் மேலும் ஒரு நபர் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஓட்டிங்கில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கமாண்டோக்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாகனம் வந்தது. அதனை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது. ஆனால் அது தப்பிச் செல்ல முயன்றது. அதனால் அது தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர்" என தெரிவித்தார்.

 

இந்தநிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்டு உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் ஒருவரான ஷெய்வாங், தங்களது வாகனம் தப்பி ஓடவில்லை எனவும், வாகனத்தை நிறுத்தச் சொல்லி எந்த சமிக்கையும் தரப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “அவர்கள் எங்களை நோக்கி சுட்டனர். (வாகனத்தை) நிறுத்தும்படி எங்களுக்கு சமிக்கை செய்யப்படவில்லை. நாங்கள் தப்பியோட முயலவில்லை... வாகனத்தில்தான் இருந்தோம். வேலையை முடித்துவிட்டு வரும் வழியில் திடீரென, எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அது எவ்வளவு நேரம் நீடித்தது என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் அது சிறிது நேரம் நீடித்தது. வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அப்போது இருட்டாகக் கூட இல்லை. இருப்பினும் எங்களைச் சுட்டார்கள்.

 

(துப்பாக்கிச் சூடு தொடங்கப்பட்டதும்) நாங்கள் அனைவரும் வாகனத்தின் தளத்தில் படுத்துக்கொண்டோம். அதன்பிறகு நான் மற்றொரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது எனது சகோதரன் உட்பட மற்றவர்கள் இறந்திருந்ததை உணர்ந்தேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம்; பயந்ததா பாஜக? 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Elections also unface Manipur; Why bjp afraid?

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் அந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  மேகாலயாவில் இரண்டு தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே மணிப்பூரில் நிகழ்ந்த கலவரம் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த நிலையில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் போட்டியிடாமல் மாநில கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி இந்த தகவலை பகிர்வதாக வடகிழக்கு மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி வந்து சேரவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில்  பயம் காரணமாக தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம் காட்டியுள்ளார் மோடி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.