ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் 1,500 பணியாளர்களைப் புதிதாக சென்னை மற்றும் கேரளாவில் பணியமர்த்தப் போவதாக, நேற்று நடந்த 'எஸ்.ஐ.ஏ.எம்' என்னும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டத்தில் அறிவித்துள்ளது. இந்தியாவில் தனது ஆராய்ச்சி மையத்தை வலுப்படுத்த உள்ளதாகவும், முதல் டிஜிட்டல் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதில் 1,000 பேர் சென்னையில் அமையவுள்ள ஆராய்ச்சி மையத்திலும், 500 பேர் கேரளாவில் அமையவுள்ள டிஜிட்டல் மையத்திலும் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 7,000 பணியாளர்கள் சென்னை ஆராய்ச்சி மையத்தில் பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் உற்பத்தித் துறையில் கணிசமான அளவிற்கு பணியாளர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ள நிஸான் தற்போது உள்ள பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.