பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.
அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். அதே நேரத்தில் அமெரிக்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் அதிபர் ஒபாமா, “எனக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாகஜவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த காலத்தில் இந்தியா மீது இதுபோன்ற புகார்களை எழுப்பியது யார் என்பதனை உற்றுநோக்க வேண்டியது அவசியம். ஒபாமா ஆட்சிக் காலத்தில் தான் ஏமன், சிரியா, சவுதி, ஈராக் என 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். இந்தியாவை குறைகூறும் ஒபாமாவை அமெரிக்க மக்கள் எப்படி நம்புவார்கள். அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் சூழலில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் கருத்தும் வியப்பைத் தருகிறது. பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் இதுவரை அந்நாட்டின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது. அதில் 6 இஸ்லாமிய நாடுகளும் அடங்கும். பாஜகவை தேர்தலில் வீழ்த்த முடியாததால், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் அடிப்படை ஆதாரமற்ற தரவுகளை வெளிநாடுகளில் பேசி வருவதே ஒபாமா போன்றவர்களின் கருத்துகளுக்குக் காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.