
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளிலிருந்து கேரளாவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக போராட்டமும், வன்முறை சம்பவங்களும் உச்சத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சபரிமலை கோயிலுக்கு மேலும் ஒரு பெண் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 46 வயதான இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் நேற்று இரவு சபரிமலையில் நுழைய முற்பட்டார். மாதவிடாய் நின்று போனதற்கான மருத்துவ சான்றிதழையும் அவர் சமர்ப்பித்துள்ளார். அதை பரிசோதித்த மாற்று உடையில் இருந்த போலீசார் பலத்த பாதுகாப்புடன், கோயில் படி வரை அவரை அழைத்து சென்றனர். ஆனால் கோயில் ஊழியர்கள், அந்த பெண்ணை, தரிசனம் செய்ய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், ' நான் 48 நாட்கள் விரதமிருந்து இங்கு வந்துள்ளேன், நன் தீவிர கடவுள் பக்தர், ஆனால் இவர்கள் என்னை உள்ளே விடவில்லை. இவர்கள் அனைவருக்கும் ஐயப்பன் பதில் கூறுவார்' என கூறினார். மேலும் இன்று காலை தேனியிலிருந்து சென்ற திருநங்கை ஒருவரும் திருப்பியனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.