சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்ததால், டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த புகார் தொடர்பாகச் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா சட்டம் - UAPA) கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேற்று மாலை டெல்லி போலீசார் சீல் வைத்திருந்தனர். மேலும் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீசார் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். இவருடன் நியூஸ் க்ளிக் ஊடகத்தைச் சேர்ந்த நிர்வாகி அமித் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட பிரபீர் புர்கயஸ்தா, அமித் ஆகியோருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இருதரப்பில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி துஷார் ராவ் கடேலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல் கூறியதாவது, சீனாவிடம் இருந்து நியூஸ் கிளிக் நிறுவனம் பணம் பெற்றதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு ஆகும். சீனாவில் இருந்து ஒரு பைசா கூட நியூஸ் கிளிக் நிறுவனம் சார்பில் பெறப்படவில்லை. அதனால், அவர்கள் மீது போலி வழக்கு போடப்பட்டுள்ளது” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின் நீதிபது துஷார், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் மீண்டும் காவலில் வைப்பது நீதிமன்றத்தின் உத்தரவுக்குட்பட்டது என்று குறிப்பிட்டு இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.