பசுவைக் கொன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பசுவதைக்கு எதிரான உத்தரப்பிரதேசத்தின் சட்டத்தில், தவறு செய்பவர்கள் தப்பிப்பதற்கான வழிகள் இருப்பதாகக்கூறி பசுவதையை தடுப்பதற்காக புதிய அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது உத்தரப்பிரதேச அரசு. புதிய சட்டத்தின்படி, பசுவைக் கொன்றால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பசுவுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்காக தற்போதுள்ள ரூ .10,000 அபராதம், ரூ .3 லட்சம் முதல் ரூ .5 லட்சம் வரை விதிக்கப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. 5 பி என்ற புதிய பிரிவை சேர்த்து, அதன்மூலம், பசுவுக்குக் காயம் ஏற்படுத்துவோர்களுக்கு ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், விதிகளை மீறி பசுக்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூ .1 லட்சம் முதல் ரூ .3 லட்சம் வரை அபராதமும் விதிக்கிறது. மேலும், பசுவுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்காததும் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.