மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு நேற்று 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசல் மீதான வரி ஒரு ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய்க்கு மேல் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அதிமுக எம்.பி யான நவநீதகிருஷ்ணன் பேசுகையில், "இது நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட். புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக போடப்பட்ட ஒரு சிறப்பான பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குறிப்பாக தமிழர்கள் அனைவருமே இந்த பட்ஜெட்டை கொண்டாட வேண்டும்.
ஏனென்றால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது புறநானூறு பாடலை சுட்டிக்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதுமட்டுமல்ல பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காது. ஏனென்றால் அவர்கள் யாரும் தினமும் பெட்ரோல் டீசலை உபயோகப்படுத்துவதில்லை" என கூறினார். அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.