விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்த கலைஞர்களின் வீடுகளுக்கு தேசிய விருது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய திரைத்துறையில் சிறந்து விளங்கும் திரைக்கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு தேசிய விருது வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வைத்து நடைபெற்றது.
தேசிய விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிக்கொண்டிருந்தார். முக்கியமான 11 பேருக்கு விருது வழங்கிய அவர், வேறு வேலை இருப்பதாகக் கூறி சென்றுவிட, அவருக்குப் பதிலாக தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மற்றும் இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் மீதமிருந்தவர்களுக்கு விருது வழங்கத் தொடர்ந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள், விருது வழங்கும் இடத்தைவிட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தனை ஆண்டுகால வரலாற்றில், குடியரசுத்தலைவர் மட்டுமே விருது வழங்குவார் எனும்போது, பாரம்பரியத்தை மாற்றும்விதமாக நடந்துகொள்வது வேதனையளிப்பதாக கலைஞர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்துச் சென்ற கலைஞர்களுக்கு, தபால் மூலமாக விருதுப்பதக்கமும், சான்றிதழும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருது விழாவில் கலந்துகொள்ளாத கலைஞர்களுக்கு தபால் வழியாக விருதுகள் அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், விருதுகளை தபால் மூலம் அனுப்பும் வேலையையும் தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகமே மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.