கரோனா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதங்களைக் குறைக்கும் வகையில் புதிய தடுப்பூசி ஒன்றை சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ கடந்துள்ள சூழலில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914- லிருந்து 6,185 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரசைக் குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கரோனா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதங்களைக் குறைக்கும் வகையில் புதிய தடுப்பூசி ஒன்றை சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தொழுநோயைக் கட்டுப்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் என்கிற தடுப்பு மருந்து, கரோனாவை கட்டுப்படுத்தக்கூடும் என்று இந்திய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் காசநோய் ஒழிப்பிலும் இந்த மருந்து முக்கிய பங்காற்றியது. மைக்கோபாக்டீரியம் டபிள்யூ எனப்படும் இந்த சோதனை முடிவுகள் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதால், விரைவில் இதனைக் கொண்டு சிகிச்சையளித்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், "சமீபத்தில் முடிவடைந்த சோதனையில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐ.சி.யூ நோயாளிகளின் இறப்பை எம்- டபிள்யூ தடுப்பூசி குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தோம். கரோனா நோயாளிகளிடம் காணப்படும் சைட்டோகைனை எம்-டபிள்யூ தடுப்பூசி குறைக்கக்கூடும், இதனால் இந்த நோயாளிகளை நிர்வகிப்பதில் பலனளிக்கும் மற்றும் இறப்பு விகிதத்தையும் குறைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.