சென்செக்ஸ், நிப்டி பங்குச்சந்தைகள் நேற்று (ஜூன் 10) ஓரளவு ஏற்றம் கண்டிருந்த நிலையில், வங்கிகள், உலோக நிறுவனங்களின் பங்குகள் வரும் காலங்களில் அதிக ஆதாயம் தரும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு ஏற்பட்டதால் செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச்சந்தைகளும் லேசான சரிவைச் சந்தித்தன. இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 10) இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து ஓரளவு மீண்டு வந்தன.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், சந்தையின் இறுதி நேரத்தில் ஓரளவு முன்னேற்றம் கண்டது. வர்த்தக நேர இறுதியில் 34,247 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதாவது, நேற்று ஒரே நாளில் 290 புள்ளிகள் (0.86%) உயர்ந்து இருந்தன. சென்செக்ஸ் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 30 முக்கியப் பங்குகளில், 15 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. 15 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி, நேற்று முன்தினம் 10,046 புள்ளிகளுடன் முடிவடைந்திருந்த நிலையில், புதன்கிழமை 10,116 புள்ளிகளில் நிறைவடைந்தது. முந்தைய நாளைக் காட்டிலும் இது 69.50 புள்ளிகள் உயர்வு. இச்சந்தையில் பங்குகளின் வளர்ச்சியைக் கணக்கிட உதவும் 50 நிறுவனங்களில், 28 நிறுவனப் பங்குகள் ஓரளவு ஆதாயம் அளித்தன. 22 நிறுவனப் பங்குகளின் விலைகள் சற்று சரிந்தன.
இண்டஸ் இந்த் பங்குகள் அதிகபட்சமாக 9.99 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. ஹிண்டால்கோ பங்குகள் 3.09 சதவீதம், ஆக்சிஸ் வங்கிப் பங்குகள் 2.83 சதவீதம், ஸ்ரீ சிமெண்ட் பங்குகள் 2.80 சதவீதம், கோட்டக் வங்கிப் பங்குகள் 2.64 சதவீதம் வரை ஆதாயம் அளித்தன. அதேநேரம், ஹீரோ மோட்டார்ஸ், கெயில், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, டைட்டான் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 1,952 நிறுவனங்களில், 1,139 நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபம் கொடுத்தன. 737 பங்குகளின் விலைகள் இழப்பைச் சந்தித்தன. 76 நிறுவனப் பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இது ஒருபுறம் இருக்க, பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்ய இது உகந்த நேரம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். வரும் காலங்களில் நிப்டி 10,000 முதல் 10,300 புள்ளிகளில் வர்த்தகம் ஆகும் எனக்கூறுகிறார், கோட்டக் செக்யூரிட்டீஸ் சந்தை ஆராய்ச்சியாளர் சஹாஜ் அகர்வால். அப்படியான வர்த்தக காலங்களில் மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்வது ஆதாயம் அளிக்கும் என்கிறார்.
அடுத்து வரும் ஓரிரு வாரங்களில் மிட்கேப் பங்குகள் விலைகள் ஓரளவு சரிந்தாலும், உடனடியாக அவற்றில் முதலீடு செய்யலாம் என்றும், குறுகிய காலத்திலேயே அவை பெரிய அளவிலான ஆதாயத்தைத் தரும் என்கிறார் அவர். குறிப்பாக, வங்கிகள், உலோக நிறுவனங்கள், ஆட்டோமொபைல், கமாடிட்டி பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்கிறார் சஹாஜ் அகர்வால்.
யு.எஸ். பங்குச்சந்தைகள் ஓரளவு முன்னேற்றப் பாதையில் செல்வதால், இந்தியப் பங்குச்சந்தைகளும் ஏற்றம் மிக்கதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.