Skip to main content

அரசுக்கு எதிராக திரும்பிய எம்.எல்.ஏ.க்கள்- சிக்கலில் மகாராஷ்டிரா அரசு! 

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

MLAs who turned against the government - Maharashtra government in trouble!

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால், அந்த மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்பியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்குமாறு கட்சித் தலைமையிடம் கோரியதாகவும், இதற்கு கட்சி தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது செல்வாக்கை காட்டும் வகையில், 25 எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

மொத்தம் 285 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 143 ஆகும். இதில் மகாராஷ்டிரா விகாஸ் அகாதிக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். குறிப்பாக, சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.க்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். 

 

பா.ஜ.க. கூட்டணிக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 25 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்படும். 

 

இந்த நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளையும், அரசு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சரிடம் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன. 

 

செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், "மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவும் வரவில்லை. கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தோ எந்த முன்மொழிவும் வரவில்லை. அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. கூட்டணியில் மோதல்?; அஜித்பவார் எச்சரிக்கை!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
BJP Conflict in alliances?; Ajitpawar alert

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இத்தகைய சூழலில் நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாராமதி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியில் இருந்துகொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

பட்டப்பகலில் நடந்த படுகொலை; சி.சி.டி.வி கேமராவில் பதிவான பகீர் காட்சி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Incident in maharashtra hotel and scene recorded on CCTV camera

மகாராஷ்டிரா மாநிலம், புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், நேற்று (17-03-24) மதியம் 4 பேர் கொண்ட நண்பர்கள் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஹோட்டலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், டேபிளில் அமர்ந்திருந்த ஒரு நபரை நோக்கி சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த அவர், கீழே விழுந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அங்கு அமர்ந்திருந்த மற்ற நபர்கள் அங்கிருந்து பதறி அடித்து ஓடினர். 

இந்த சம்பவம் அரங்கேறிய சிறிது நேரத்திலேயே, மேலும் 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலில் நுழைந்து, துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன் பின்னர், அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அவினாஷ் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில், நடந்த இந்த கொடூர படுகொலை, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. அந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கொலை செய்த நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.