கரோனாவிற்கு பிறகு உலகத்தை அடுத்தபடியாக அச்சுறுத்தி வருகிறது குரங்கு அம்மை எனும் நோய். பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது மீண்டும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று பதிவாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை கேரள அரசின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த 38 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர் சிகிச்சையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் ஒருவருக்கு கிளேட்- 2 வகை குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளேட்-2 வகை குரங்கு அம்மையால் பாதிப்பு இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.