உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா தற்போது சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 74 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா பரவலுக்கு எதிராக சார்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "நமது கிரகம் முழுவதுமே கரோனா வைரஸுடன் போராடுகிறது. பல்வேறு மட்டங்களில், அரசாங்கங்களும் மக்களும் அதை எதிர்த்துப் போராட முயல்கின்றனர். இந்த நேரத்தில், உலக மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள நாடுகளான தெற்காசிய நாடுகள், நமது மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தென் ஆசியப் பிராந்திய ஒத்துழைப்பு சங்க (சார்க) நாடுகளின் தலைமை கரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வலுவான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத் திட்டங்களை வகுக்க காணொளி கான்பரன்சிங் மூலம் நாம் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.