நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாஜக சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வாகன பேரணி நடைபெற்றது. வாரணாசியின் முக்கிய சாலைகளில் பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இணைந்து சாலை பேரணியை நடத்தினர். சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய மிக நீண்ட சாலைப் பேரணியாக நடைபெற்றது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வாசலில் உள்ள மதன் மோகன் மாளவியா சிலைக்கு மலர்மாலை அணிவித்து பின்னர் இந்தச் சாலை பேரணி தொடங்கியது. இந்தப் பேரணிக்கு பிறகு மடாதிபதிகள் என்டிஏ கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.