Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; காதலியின் குடும்பத்தை ஆற்றில் தள்ளிய காதலர்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

andhra gundur thaadaipalli viral incident

 

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டம் தாடைப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுஹாசினி. இவருக்கு கீர்த்தனா, ஜெர்சி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், சுஹாசினிக்கு குடிவாடாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனிடையில் நேற்று அதிகாலை சுரேஷ், சுஹாசினியையும் அவரது இரண்டு குழந்தைகளையும் அழைத்து தனது காரில் ஏற்றிக்கொண்டு ராஜ மகேந்திரவரம் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, வழியில் இருந்த கோதாவரி ஆற்றுப் பாலத்தில் தனது காரை நிறுத்தி சுஹாசினியிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சுரேஷ் கூறியுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய சுஹாசினி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து ஆற்றுப் பாலத்தின் நுனியில் நின்று போஸ் கொடுத்துள்ளார். செல்பி எடுப்பது போல் நின்ற சுரேஷ் திடீரென்று சுஹாசினியையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கீழே தள்ளியுள்ளார். இதில் மூத்த மகளான கீர்த்தனா, ஆற்றுப் பாலத்தில் கீழே இருந்த பிளாஸ்டிக் குழாயைப் பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், சுஹாசினியும் அவரது இளைய மகளான ஜெர்சியும் ஆற்றுத் தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

 

இதையடுத்து, சுரேஷ் தனது காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதனிடையில், கீர்த்தனா சுதாரித்துக்கொண்டு தான் வைத்திருந்த செல்போன் மூலம் 100 என்ற எண்ணுக்கு காவல்துறையினரை அழைத்து தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராவுலபால காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், பிளாஸ்டிக் குழாயைப் பிடித்து இருந்த கீர்த்தனாவை காப்பாற்றி பத்திரமாக மீட்டனர்.

 

இதுகுறித்து ராவுலபால காவல்துறையினர், “இன்று அதிகாலை 3:50 மணியளவில், சுரேஷ் என்பவர், ராஜ மகேந்திரவரம் பாலத்தில் இருந்து சுஹாசினியையும் அவரது இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டார். கீர்த்தனா பாலத்தின் பிளாஸ்டிக் பைப்பைப் பிடித்துக் கொண்டு 100க்கு டயல் செய்தார். கீர்த்தனா கொடுத்த தகவலின் பேரில் 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்தோம். அதற்குள் சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் பாலத்தின் பைப் லைனில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக நாங்கள் கீர்த்தனாவை மீட்டோம். அதுமட்டுமல்லாமல், கோதாவரி ஆற்றில் விழுந்த சிறுமியின் தாய் மற்றும் ஜெர்சியை தேடுவதற்கு 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கீர்த்தனா கொடுத்த தகவலின் பேரின் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்