ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்களது இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். மேலும், ஆப்கன் மக்களுக்குத் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துவருகின்றனர். அதே நேரத்தில் மற்ற உலக நாடுகளுடன் நல்லுறவை விரும்புவதாக கூறும் தலிபான்கள், சில நாட்டின் அரசுகளோடு பேச்சுவார்த்தையும் நடத்திவருகின்றனர்.
இந்தநிலையில் தலிபான்கள், தங்கள் நாட்டு தலைநகர் காபூலில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு வர்த்தக விமானங்களை மீண்டும் இயக்கக் கோரி இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். தலிபான்களின் இந்தக் கோரிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்துவருகிறது.
ஆப்கன் தலைநகர் காபூலுக்குள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் நுழைந்தனர். அதனையடுத்து இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தக விமானங்களை இயக்குவதை நிறுத்தியது. அதேநேரத்தில் விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம், ஆப்கனில் சிக்கிய இந்தியர்களை இந்தியா மீட்டது குறிப்பிடத்தக்கது.