சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று (10-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்து கொண்டு, உட்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அளவில் இருந்து சர்வதேச அளவுக்கு இயங்க தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தை தேடி வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து பல பேர் இந்த நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். இந்தியாவில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியிருக்கிறோம். இதற்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேசிய கல்விக் கொள்கைகளில் சில உள்ளீடுகளை கொண்டு வர பரிந்துரை செய்தார்கள். அதனை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்மை பெற்று வருகிறார்கள்” என்று கூறினார்.