மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், தமிழில் எழுத விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது.
2022- ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத முதன்முறையாக 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முந்தைய ஆண்டில் விண்ணப்பித்ததை விட, 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வு 12 இந்திய மொழிகளில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டும் தமிழில் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது.
அதேபோல், நீட் பொதுத்தேர்வை எழுதும் பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2017- ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில், இந்தாண்டு 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.