ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்ப்பு அதிக அளவில் எழுந்தது. பல உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மெஹபூபா முப்தி இதுபற்றி கூறுகையில், 'பதான்கோட் தாக்குதல் அல்லது மும்பை தாக்குதல் ஆகிய அனைத்திற்கும் அவர்கள் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இம்ரான் கான் ஒரு புதிய பிரதமராக இருப்பதால், அவர் ஒரு புதிய தொடக்கத்தைப் பற்றி பேசுகிறார், அவருக்கு இந்த விஷயத்தில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாம் ஆதாரத்தை வழங்க வேண்டும், அதன்பின் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்' என கூறினார். பதில் தாக்குதல் நடத்துவோம் என கூறிய இம்ரான் கானுக்கு ஆதரவு தரும் வகையில் அவர் பேசியுள்ளதாக சமூகவலைதளங்களில் அவருக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.